27ஆம் ஆண்டுக் கருத்தரங்க அழைப்புச் சுற்றறிக்கை

27ஆம் ஆண்டுக் கருத்தரங்க அழைப்புச் சுற்றறிக்கை

27- ஆம் ஆண்டுக் கருத்தரங்கம் உலக தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் வரலாற்றுப்புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள மீரா மஹால் என்னும் திருமண மண்டபத்தில் சூலை திங்கள் 22 மற்றும் 23 சனி ,  ஞாயிறு   ஆகிய இரண்டு நாட்கள் சிறப்புடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான செயல்பாடுகள் இனிதே நடந்து வருகின்றன.

22- ஆம் தேதி காலை 10 மணியளவில் கருத்தரங்க தொடக்கவிழா தொடங்கி ஆய்வாளர்களின் அமர்வுகளுடன் 23-7-2017 அன்று மாலை நிறைவு விழாவுடன் இனிதே நடைபெற உள்ளது.  ஆவணம் இதழ் -28  இவ்விழாவில் வெளியிடப்பட உள்ளது. ஆய்வாளர்கள் அனைவரும் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளுடன் வந்திருந்து இக்கருத்தரங்கை சிறப்பிக்க வேண்டுகிறேன். புதியகட்டுரைகளை கணினி செய்து உரிய ஒளிப்படங்களுடன் எடுத்து வரவும். இது ஆவண இதழின் அடுத்த வெளியீட்டிற்கு உதவியாக அமையும். கட்டுரைகள் அளிப்பதற்கான கணினி விளக்கக் காட்சிக்கருவி வசதி செய்யப்பட்டுள்ளது.

கங்கை கொண்ட சோழபுரம் நம் அனைவருக்கும் புதிய நகரம் அல்ல. வரலாற்றுடன் வரலாற்று ஆர்வலர்களுடன் தொடர்புடையது. மாமன்னன் இராஜராஜசோழனின் மைந்தன் முதலாம் இராஜேந்திர சோழன் பார் புகழ் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய நகரம். உலக கோயிற்கட்டடக்கலை வரலாற்றில் உயர்நிலையை பெற்ற கோநகரம். வானளாவிய விமானம் உலகக்கலை வல்லுநர்களை வியக்கவைக்கும் அழகமைந்த அறிய சிற்பங்கள் இராஜேந்திர சோழன் திருமன்னி வளரப் பெருமையுடன் அரசாட்சி ஒச்சிய தலைமையகம். அகழ்ந்தெடுக்கப்பட்ட அரண்மனை வளாகம். வரலாற்றுப் புகழ்ப்பெற்றப் ஊர்கள் பலவற்றின் சூழலகம். கடல்கடந்து கடாரத்தில் கால்பதித்த வீரர்களின் தலைபயிற்சிக்களம். எனவே, இக்கருத்தரங்கின் வாயிலாக இவ்வனைத்து  கூறுகளையும் காணவும் கேட்கவும் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.

வழித்தடங்கள்:

தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் கல்வெட்டு அறிஞர்கள் இக்கருத்தரங்கிற்கு வருகை புரிய இருக்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் வரும் ஆய்வாளர்கள் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு சாலை வழியாகவே வருதல் வேண்டும். கும்பகோணம், ஜெயங்கொண்டம் அருகில் உள்ள நகரங்கள் ஆகும். கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் ஜெயங்கொண்டம் கூட்டுச்சாலையில் இறங்கி உள்ளூர் பேருந்து அல்லது மூவுருளி மூலம் இரண்டு கி.மீ தொலைவில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் வரலாம். சென்னையிலிருந்து வரும் அன்பர்கள் இக்கூட்டுச் சாலையில் இறங்கலாம். திருச்சிராப்பள்ளி அரியலூர் ஜெயக்கொண்டம் வழியாகவும் கங்கை கொண்ட சோழபுரத்தை அடையலாம்.

சென்னையிலிருந்து தொடர்வண்டி மூலம் வர விரும்புவோர் கும்பகோணம் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி கங்கை கொண்ட சோழபுரத்திற்கு சாலை வழியாக வருதல் வேண்டும். கும்பகோணம் நகரிலிருந்து பேருந்தின் மூலம் கங்கை கொண்ட சோழபுரம் அடையாளம். சென்னை – மதுரை- திருநெல்வேலி இருப்பு பாதை வழியாக வருவோர் அரியலூர் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி அறியலூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு ஜெயக்கொண்டம் வழியாகப் பேருந்தில் வரலாம்.

இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்குப் பொதுவாகத் தங்குவதற்கு மண்டப வசதி செய்யப்பட்டுள்ளது. தனி அறைகள் வேண்டுவோர் ஜெயங்கொண்டம் அல்லது கும்பகோணத்தில் விடுதிகளில் தங்கள் சொந்த செலவில் தங்கி கங்கை கொண்ட சோழபுரம் வருதல் வேண்டும். முன்கூட்டியே இதனை தெரிவித்து உரிய தொகை அனுப்பினால் ஜெயகொன்டத்தில் அறைவசதிகள் செய்து தரப்படும். கருத்தரங்க கட்டணமாக ரூ. 350, – ( ரூபாய் முன்னூற்று ஐம்பது மட்டும்) கருத்தரங்க நாளன்று நேரிடையாகச் செலுத்தலாம்.

குடும்பத்துடன் நண்பர்களுடன் வரும் உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக கருத்தரங்க கட்டணம் ரூ. 350, – செலுத்துதல் வேண்டும். தமிழக தொல்லியல் கழகத்தின் உறுப்பினராக இல்லாதவர் வாழ்நாள் கட்டண உறுப்பினராக சேர்ந்தால் மட்டும் கருத்தரங்கில் கட்டுரைகள் படிக்க இயலும். தலைவர், செயலர் மற்றும் செயற்குழு முடிவெடுத்தபடி ஆண்டு உறுப்பினராக சேர்வதைத் தவிர்க்க வேண்டுகிறோம். அவ்வாறு சேர்ந்தவர்களுக்கு இந்நிகழ்வில் பங்கு பெற்று கட்டுரை வாசிக்க மட்டுமே அனுமதி அவர்களுக்கு ஆவணம் இதழ் வழங்க இயலாது எனச் செயற்குழு முடிவாற்றி உள்ளது.

இவ்வாண்டு அறக்கட்டளைச் சொர்பொழிவாளர்கள் :

பத்மாஸ்ரீ ஐராவதம் மகாதேவன் அவர்கள் நிறுவிய தி. நா. சுப்பிரமணியன் அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் 19 ஆவது சொற்பொழிவினை முனைவர். கா . ராஜன், பேராசிரியர் (வரலாற்றுத்துறை, பாண்டிசேரி பல்கலைகழகம்) அவர்களும், கோவிலூர் ஆதின அறக்கட்டளைச் சொற்பொழிவு வரிசையில் 17 ஆவது சொற்பொழிவினை முனைவர் தி. சுப்பிரமணியன் (மேனாள் உதவி இயக்குனர், தமிழ்நாடு அரசு தொல்லியல்  துறை, தருமபுரி. ) அவர்களும் நிகழ்த்த உள்ளார்கள்.

கல்வெட்டு பயிற்சி போட்டி:

                தொல்லியல் கழகத்தின் செயலர் அவர்களின் முதல் சுற்றறிக்கையில் விவரங்களைப் பார்க்கவும். போட்டியில் கலந்து கொள்ள முன்னதாகப் பதிவு செய்வதற்கு செயலர் தொல்லியல் கழகம் அலைபேசி 9444261503 அல்லது 8438471319 ஆகிய அலைபேசி எண்ணிற்கு 05-07-2017 ற்குள் தொடர்பு கொள்ளவும். போட்டியினை நடத்தும் தலைவராக முனைவர் சு. இராசகோபால் அவர்கள் செயல்வடுவார்.

 

தங்களின் வருகையை அன்புடன் எதிர்நோக்கும்

இவினிய கருத்தரங்க விழாவில் நமது கழகத்தின் தொல்லியல் கழகத்தின் நிறுவன உறுப்பினரும் சென்னைப் பல்கலைகழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் தலைவராகவும் விளங்கிய பேராசிரியர் ப.சண்முகம் அவர்களின் மணிவிழா ஆய்வு நூல் வெளியிடப்பட்டு அவருக்கு சிறப்பு செய்யப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். மேலும் நூல்கள் பலவும் வெளியிடப்பட உள்ளன.